Tamil
QoTD
உடனே சொர்க்கத்திற்குச் செல் !!
Udayakumar Nalinasekaren
Dec 29, 2010
அக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான். "மஹாராஜா, நேற்று என் கனவில் தங்கள் தந்தையார் வந்தார்" என்றான். அக்பரும் உடனே "மேலே சொல். அவர் என்ன சொன்னார்" என்றார்.
நாவிதன் "உங்கள் தந்தைக்கு சொர்க்கத்தில் பொழுதே போகவில்லையாம். பேச்சுத்துணைக்கு அறிவிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் கூட இருந்தால் தேவலாம் என்றார். உங்களை உடனே அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றான்.
அக்பரும் உடனே சொர்க்கத்திற்குப் போகுமாறு பீர்பாலுக்குக் கட்டளை போட்டு விட்டார். பீர்பால் ஒத்துக் கொண்டு இரண்டு வாரம் தவணை கேட்டார். "அதனாலென்ன.. எடுத்துக் கொள்" என்று பேரரசரும் பெரிய மனதுடன் சம்மதித்தார்.
பீர்பால் வீட்டுக்குப் போய் தன் சவக் குழியை தானே தோண்டினார். யாருக்கும் தெரியாமல், அதிலிருந்து தன் வீட்டுக்குள் செல்ல ஒரு ரகசிய குகையை அமைத்தார். வேலை முடிந்த பின் அக்பரிடம் போய், "அரசே, நான் சொர்க்கத்துக்குப் போகத் தயாராகி விட்டேன். ஆனால் என்னை உயிருடன் புதைத்தால்தான் நான் வேகமாகச் சொர்க்கத்திற்குப் போக முடியும். ஆகவே, எங்கள் குடும்ப வழக்கப் படி என்னைத் தயவு செய்து என் வீட்டிலேயே புதைத்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டபடியே அக்பரும் செய்தார்.
திட்டமிட்டபடி பீர்பால், மூடிய சவக் குழியில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் வந்து விட்டார். யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மறைந்து சுமார் ஆறு மாதம் வாழ்ந்தார். நீண்ட தாடியும் சடை முடியும் வளர்த்தார்.. பிறகு ஒரு நாள் திடும் என்று அரசவையில் அக்பர் முன்னால் போய் நின்றார்.
அக்பர் வியப்புடன் "பீர்பால், எப்படி நீ திரும்பி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு "அரசே, தங்கள் தந்தையார் என்னுடன் கழித்த ஆறு மாதம் மிகவும் மகிழ்ச்சியாகப் போனதால் எனக்கு ஊருக்குத் திரும்பிச் செல்ல வரம் கொடுத்தார். உங்களை மிகவும் விசாரித்தார்" என்றார் பீர்பால். "அப்பா நலமாக இருக்கிறாரா?" என்று ஆவலுடன் சக்ரவர்த்தி வினவினார். பீர்பால் அதற்குத் தன் தாடியையும் சடை முடியையும் தடவிக் கொண்டே "மன்னா , அவர் நலமாகத்தான் இருக்கிறார். ஆனால் நாவிதர்கள் யாரும் சொர்க்கத்திற்குப் போவதில்லை போலும். அதனால் சரியாகச் சவரம் செய்து கொள்ள இயலாமல் என்னைப் போலவே அவரும் சடை முடியுடன் பரிதாபமாகத் தோற்றமளிக்கிறார். இதற்கு நீங்கள் ஏதாவது உடனே ஆவன செய்ய வேண்டும். நம் அரண்மணை நாவிதன் உத்தமன். அவனை அனுப்பினால் நேரே சொர்க்கத்திற்குத்தான் போவான். காரியம் ஆகிவிடும்" என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search