Tamil
QoTD
தமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை
Udayakumar Nalinasekaren
Dec 29, 2010
1876 ஆம் ஆண்டு தமிழில் தாது வருடம். அந்த ஆண்டு தமிழகத்தில் சொல்ல முடியாத அளவு பஞ்சம். அந்தப் பஞ்சம் பற்றி நடராஜன் என்பவர் பாடிய நாட்டுப் பாடல் இங்கே. காட்டை (வயலை) உழுது பயிரிடுவோர் கவுண்டர் என்று பாடலில் வருகிறது. பூமியை அடகு (கொதவு) வைத்தாலும் அன்று காசு கொடுப்பாரில்லை. இருந்த நகையெல்லாம் அடகு வைத்தாலும் பிண்ணாக்கு வாங்கக் கூடக் காசில்லை என்று அவலத்தைச் சொல்கிறது இந்தப் பாடல். வயலை விட்டு நகரத்திற்குப் போன எட்டுப் பேரில் மூன்று பேர் பிழைத்தார்கள். மற்றவர்களை காலரா கொண்டு போய் விட்டது. "அதைச் சாப்பிட மாட்டேன் இதைச் சாப்பிட மாட்டேன்" என்று "நொரநாட்டியம்" பேசியவர்கள் மாட்டுக்குப் போடும் பிண்ணாக்கையும் கத்தாழைக் குருத்தையும் மண்திட்டின் மறைவில் நின்று சாப்பிட்டார்களாம். தவசம் என்றால் தானியம் என்று பொருள். தானியம் பிடித்தை கையில் ஈயக் காசுக்கும் வழியில்லையாம். வள்ளம் என்றால் படகு, இங்கு வள்ளம் பற்றிய வரிகள் என்ன சொல்கின்றன என்று புரியவில்லை.
பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே
பஞ்சமும் அப்போதே காரணமாகத் தொடர்ந்ததுவே
கும்மியடிக்கிறேன் கந்தன் கணபதி காப்பாரே
சத்தியவர்க்கருளாய்
பால் நகர் சந்திரன் எத்திசை சேரும் நடராஜன்
அம்மன் சொல்படி பந்தியாய் நின்று
பாடுவோமே கும்மி தாது வருஷத்தை
தலை விதிப்படியேதான் மழையெங்கும் இல்லாமல்
கன்னி மாதத்தில் ஒரு மழை பேயவும்
கண்டெடுத்த ஒரு புதையலைப் போலவே
தானியம் விதைத்தார்கள் தாது வருஷத்தில்
சீமையில் மழைமாரி பூச்சிய மாகவே
தீய்ந்து பயிரெல்லாம் காய்ந்ததையா
அரைக்கீரை சோளம் சிறு நெல்லு கம்புக்கு
காரண மானதோர் புதன் சந்தையில்லை
எட்டு வள்ளம் விற்று இரண்டு வள்ள மாகி
துட்டமான பேர்களை மட்டடக்கி
தட்டுப்படாதடுதைத்து வள்ளத்தில் வைத்து
கொட்டுப் பட்டாற் போல நிறுத்திற்றுமே
மாதமாம் தீபாவளிப் பண்டிகை வந்தது
ஆன பேர் களிப்புடன் கொண்டாட முடியாமல்
நோம்புகள் போச்சுதே. ஐயையோ கம்பு
கார்த்திகை மாதத்தில் முக்கால் வள்ளம் கூட
காணமுடியாமல் நாங்களும் தெம்பற்றோம்
காட்டை யுழுது பயிரிடும் காராளக்
கவுண்டரெல்லாம் கவலேத்தமாட் டினை
தேடியே கட்டை வண்டியில் கட்டி
ஓடரோம் தூரதேசமும் என்றாரே
போயங்கு தவசம் பிடித்திட்டக் கையில்
ஈயக் காசுக்கும் ஏதும் வழியில்லை
பூமியைக் கொதவு வைத்தாலும் ஆங்கே
பூரணக் காசுகள் தந்திடுவாரில்லை
காப்புக் கடகமும் தோள் வெண்டயமும்
காதுக் கொப்பு சில்லரை தாலியில்லாம் விற்றாலும்
கட்டாது அந்த ரூபாயெல்லாம் உமக்கு
கவலை ஏத்த மாட்டுத் தீனிக்கே மட்டும்
பத்தாததிற்கு பணம் வேண்டும் என்றுமே
ஆடு மாடெல்லாம் விற்றெடுத்துக் கொண்டு
ஆறுபேர் ஏழுபேர் நாம் சேர்ந்து நல்ல
கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால்
புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன
புடிச்சுமே காலரா போகும் எட்டுப் பேரில்
மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள்
எல்லாம் சிவன் செயல் என்றிடு வாரெல்லாம்
தினுசு வேலைகள் எட்டுமே செய்குவார்
சீமைகள் எங்கும் சுற்றித் திரிகுவார்
சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன
சொகுசான மகராச மக்களுகளெல்லாம்
மழுங்களாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே
மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே
புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன
புண்ணிய மகராச மக்களுகளெல்லாம்
மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம்
எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ
உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை
ஊருக்கிணத்திலே தண்ணியில்லை
நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்- துரைக்கு
அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார்
மூலம் - தமிழ் இணையக் கல்விக் கழகத் தளம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search