Tamil
QoTD
நம்மை நமக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்
Udayakumar Nalinasekaren
Sep 09, 2020
ஒரு ஊரில் ஒரு அழகான இளவரசன் இருந்தான். அவன் தந்தை அவர் இறக்கும் தருவாயில் அரண்மனையின் ரகசியங்கள் அனைத்தையும் அவனிடம் சொன்னார். கூடவே ஒரு தங்க சாவியையும் அவன் கையில் கொடுத்து விட்டு, “அரண்மணையில் ஒரு தங்க கதவில் தங்க பூட்டு தொங்கும். இது அதற்கான சாவி. என்ன நடந்தாலும் அந்த பூட்டை மட்டும் திறந்து விடாதே” என்று சொல்லி ஒரு ‘ட்விஸ்ட்’ வைத்து விட்டு அவர் நிம்மதியாக போய் சேர்ந்து விட்டார்.
(இளவரசன் ராஜாவாக ஆகிவிட்டான். இருந்தாலும் நம் கதைக்கு இன்னும் அவன் இளவரசனே.)
இளவரசன் ஒவ்வொரு நாளும் அரண்மணையை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்து அப்பா சொன்ன ரகசியங்களை அனுபவத்தில் புரிந்து கொண்டான். ஒரு நாள் அவன் அப்படி அரண்மணையை சுற்றி வந்த போது ஒரு இடத்தில் தங்க கதவில் தொங்கும் தங்க பூட்டை பார்த்து விட்டான். அப்பா ‘திறக்காதே’ என்று சொன்னதை திரும்பத் திரும்ப யோசித்தான். கடைசியில் அப்படி என்னதான் அங்கே இருக்கும் என்ற குறுகுறுப்பு அடங்காமல் தங்க சாவியைக் கொண்டு வந்து அந்த பூட்டைத் திறந்து அறையின் உள்ளே சென்றான்.
முதலில் வெற்று அறையாகத் தெரிந்த அங்கே தரையில் ஒரு பேழை மட்டும் இருந்தது. அதிலும் ஒரு பூட்டு தொங்கியது. வெளிப் பூட்டையே திறந்து விட்டோம், இது என்ன பிரமாதம் என்று அந்தப் பூட்டையும் இளவரசன் திறந்தான்.
பேழையின் உள்ளே ஒரு அழகான பெண் குழந்தையின் ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது. இளவரசன் அதைப் பார்த்தவுடன், “இவ்வளவு அழகான குழந்தை இப்போது குமரியாக வளர்ந்திருப்பாளே. குழந்தையிலேயே இவ்வளவு அழகு என்றால் இப்போது இன்னும் பல மடங்கு அழகுடன் இருப்பாளே” என்று யோசித்தான்.
அந்த படத்தை மதியுகி மந்திரிகள் மற்றும் அரண்மனையில் பலரிடமும் காட்டி இவள் யாரென்று தெரியுமா என்று கேட்டான். பலரும் “இவள் நம் அரசின் குடிமகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று சொல்லவே அவளை தேடச் சொல்லி உத்தரவு போட்டான். சேவகர்களுடன் சேர்ந்து தானும் தேட ஆரம்பித்தான்.
வருடக் கணக்கில் தேடினார்கள். நாடு விட்டு நாடு போய் தேடினார்கள். அவள் அகப்படவில்லை. இளவரசன் அவளை தேடிக் கொடுப்பவர்களுக்கு பெருந்தொகை பரிசு என்று அறிவித்தான். பலனில்லை. அவனுக்கு சாப்பாடு செல்லவில்லை. தூக்கம் போயிற்று. நோய்வாய்ப் பட்டான்.
இதை கேள்விப்பட்ட அவன் அப்பாவின் இளம் வயது நண்பர் ஒருவர் இளவரசனைப் பார்க்க அவனைத் தேடி வந்தார். “நன்றாகத்தானே இருந்தாய். என்ன ஆயிற்று உனக்கு” என்று கேட்டார். அவரிடம் பெண்ணின் ஓவியத்தைக் காட்டி “இது யார்? என் அப்பா இந்தப் படத்தை ஏன் பூட்டி வைத்திருந்தார். இவளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இதை தெரிந்து கொள்ளாமல் எனக்கு தலையே வெடித்து விடும் போல் ஆகி விட்டது” என்றான்.
ஓவியத்தை பார்த்து சிரித்த அப்பாவின் நண்பர் “நீ உன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது” என்றார்.
“இந்தப் பெண் யாரென்று தங்களுக்குத் தெரியுமா” என்று இளவரசன் கேட்டதற்கு “ஆம்” என்று சொன்ன அவர் “உன் அப்பாவிற்கு பெண் குழந்தை வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அவருக்கு அந்த பாக்கியம் இல்லை. ஆகவே குழந்தையில் உனக்கு பெண் வேடம் போட்டார். ஒவியனைக் கொண்டு உன்னை அந்த வேடத்தில் ஓவியமாக வரைந்து வைத்துக் கொண்டார். தினமும பார்த்து பார்த்து ஆனந்த பட்டுக் கொண்டிருந்தார். நீதானப்பா அது” என்று சொல்லி பிரச்சினையை முடித்து வைத்தார்.
இதைப் போலத்தான் நாமெல்லாம் மகிழ்ச்சி, அமைதி, நிறைவு இவை மூன்றையும் நமக்கு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். இவை நமக்கு உள்ளேயே அடக்கம். உள்ளே தேடினால் கிடைக்கும். வெளியே தேடினால் எப்படி கிடைக்கும்?
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே”
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search