Tamil
QoTD
ரெட்டச்சுழி
Udayakumar Nalinasekaren
Dec 19, 2010
மே 7, 2010 அன்று சத்யம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்தேன். சனிக் கிழமை மதியம் படம் ஆரம்பிக்கும் போது அரங்கு நிறைந்திருக்கவில்லை. முதலில் வந்திருந்தவர்கள் சராசரி வயதைக் கணக்கிட்டால் சுமார் 40 க்கு மேல் என்று சொல்லலாம். இளசுகள் எல்லோரும் 'சுறா' பார்க்கப் போயிருந்தார்கள் போலும். டிக்கட் கிடைக்காதவர்கள் பின்னால் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
ஊரில் இரண்டு வயது முதிர்ந்த முக்கியப் பிரமுகர்கள் எதிரும் புதிருமாக வாழ்ந்து கொண்டு ஒருவர் மேல் ஒருவர் அதிமிஞ்சிய 'காண்டு' காட்டுகிறார்கள். இதற்கிடையே நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டியும் போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு பக்கத்திலும் பேரன் பேத்திகள் பட்டாளம். அவர்களும் இந்தக் 'காண்டு'வை கட்சி கட்டிக் கொண்டு கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார்கள். இயக்குனர் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் ஒரு டஜன் வாண்டுகளுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். மிதமில்லாமல் அருமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வாண்டுகளிலேயே கால் சட்டையை அடிக்கடி நழுவ விட்டுக் கவர்ச்சி காட்டும் சிறுவனின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
படத்தில் முதல் பாதி சவ்வாய் இழுக்கிறது.. தேவையில்லாமல் முதல் பாதியில் ஓட்டியிருக்கும் பல காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். முதல் தலைமுறைக் காதல் தோல்வி (பெரியவர்களின் பகைக்குக் காரணம்) சொல்லப் பட்டவுடன் சூடு பிடிக்கும் கதை, மூன்றாம் தலைமுறைக் காதலைச் சேர்த்து வைக்க வாண்டுகள் சூட்சுமங்கள் செயல் படுத்தும் போது வேகம் பிடிக்கிறது. உச்சக் கட்டமும் மனதைத் தொடும் படி அமைந்து இருந்தது.
படப்பிடிப்பு (முக்கியமாக வெளிப்புறக் காட்சிகள்) மிகவும் அருமை. சேரன்மாதேவிக்கு ஒரு நடை போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பாடல்கள் எதுவும் நிற்கவில்லை. எனக்கு இந்த வித்தியாசமான படம் பிடித்திருந்தது.
இரண்டு பெயர் பெற்ற இயக்குனர்களையும் ஒரு டஜன் குழந்தைகளையும் நடிக்க வைப்பது என்பது இமாலயச் சிரமம். இயக்குனரை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search