Tamil
QoTD
ராவணன் திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
ஜூலை 11, 2010 - வீரப்பன் போல் ஒர் மனிதனை ராவணனாகவும், காவல் துறை மேற்பார்வை அதிகாரி (SP) ஒருவரை ராமனாகவும், அவர் மனைவியை சீதையாகவும், ஊறுகாய் கடிக்க கார்த்திக் போல ஒருவரை அனுமானாகவும் யோசித்தீர்களானால் 'ராவணன்' கதை உங்களுக்குப் புரிந்து விடும்.
சுஹாஸினி வசனம் எழுதியிருக்கிறார். பொதிகையில் மெகாதொடர் பார்த்து விட்டு எழுதியிருப்பார் போலும். கதாபாத்திரங்கள் 'ஷாட்'டுக்குள் வரவேண்டும் என்று நீள வசனங்களை அவசர அவசரமாகப் பேசுகிறார்கள் என்று தோன்றியது. சில காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை. பல இடங்களில் ஒரே கூச்சல்.
'அய்ஷ்' சீதையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். வரவில்லை பாவம். ஒரு காட்சியில் அவரே 'நான் தைரியமாக இருப்பதாக நடிக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை' என்ற பாணியில் வசனமே பேசியிருக்கிறார். அந்த வசனத்தை மட்டும் முழுவதுமாக உணர்ந்து நடித்திருக்கிறார். பொம்மை போல் வந்து கண்களை அசைத்து விட்டுப் போகும் காட்சிகளில் அருமையாகச் செய்திருக்கிறார். 'சீ சென்டர்' ரசிகர்களுக்கும் வஞ்சகமில்லாமல் நடித்துப் போயிருக்கிறார்.
ராவணன் சீதையை ஆதாரக் கதையில் வருவது போல இங்கே அவள் மேல் ஆசைப் பட்டுத் தூக்கி வரவில்லை. கடத்திய காரணத்தை இடைவேளைக்கு அப்புறம் ப்ரியாமணி உதவியுடன் சொல்கிறார்கள். அதனாலேயே படம் வெறும் காட்சிகளாகத்தான் வெகுநேரம் நகர்கிறது. ப்ரியாமணியை சூர்பணகையாகப் பார்க்க மனசு கேட்க மாட்டேனென்கிறது. அழகான பெண். சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
படப் பிடிப்பு அருமை. 'வீரா' பாட்டு இசைவாக இருந்தது. பள்ளத்தாக்கின் மேல் கயிற்றுப் பாலத்தில் சண்டை போடுவதை அருமையாகப் படமாக்கி இருக்கிறார்கள். போலிஸ் ராமர் தன் சீதையிடம் ரயிலில் பேசும் வசனம் பல தமிழ் அம்மணிகளுக்குப் பிடித்திருக்காது. மொத்தத்தில் போர் அடிக்காமல் இரண்டு மணி நேரம் போயிற்று. மற்றபடி பெரிதாகச் சொல்லும் படி வேறு ஒன்றும் இல்லை.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search