Tamil
QoTD
பெங்களூரு நெரிசலுக்குத் தீர்வுகள்
Udayakumar Nalinasekaren
Jan 14, 2011
பெங்களூருவில் கார் ஒட்டி அலுத்துப் போய் "இதற்கு மாட்டு வண்டியே தேவலாம்" என்று யோசித்திருக்கிறீர்களா? பெங்களூரு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இப்போது உங்களுக்காகவே தொழில்நுட்பத்தை உபயோகித்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வழிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்திப்புகளில் இருக்கும் சைகை விளக்குகள் (traffic lights) மையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்தச் சந்திப்பில் பொருத்தியிருக்கும் காமிராக்களின் (camera) உதவியுடன் இயக்கப் படுகின்றன. "மையக்கட்டுப்ப்பாட்டு அறையில் ஒரு ஆள் ஒரு நேரத்தில் எத்தனை சந்திப்புகளை கண்காணிக்க இயலும்" என்று யோசிக்கிறீர்களா?
இதற்காகத்தான் பல சந்திப்புகளில் வெளிநாடுகளில் இருப்பது போல மின் உணரிகள் (induction sensor) பொருத்தி இருக்கிறார்கள். இந்த உணரிகள், வாகனங்கள் அவற்றின் மேல் செல்வதை உணரக் கூடியவை. மின்னணுச் சுற்றுகள், இந்தத் தகவலை உபயோகித்து ஒரு சந்திப்பில் எந்தப் பாதையில் வாகன ஓட்டம் அதிகமாக இருக்கிறது என்று கண நேரத்தில் கணித்து, அந்தப் பாதைக்கு சைகை விளக்குகள் (மனித உதவியின்றி) தானே முன்னுரிமை அளிக்கும் வகையில் இயக்கித் தரும். காலியாக இருக்கும் சந்திப்பில் இனிமேல் பச்சை விளக்கு வருவதற்காகத் தாடி வளர்த்துக் கொண்டு இரண்டு நிமிடம் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் சந்திப்பிற்கு வரும் போது உங்கள் பாதைக்கு சிகப்பு விளக்கு போடப் பட்டிருந்து சந்திப்பில் வாகன ஓட்டம் எதுவும் இல்லையென்றால், நீங்கள் சந்திப்பை அடைந்தவுடன் உங்களுக்குப் பச்சைக் கொடிதான்!
மேலும் மையக்கட்டுப்பாட்டு அறைக்கு செயற்கைக் கோளில் இருந்தும் போக்குவரத்து அடர்த்தி பற்றிய தகவல்களை நேராநேரத்திற்குத் திரட்டி அனுப்புவதன் மூலம் கண்காணிப்பாளர்களின் வேலை மேலும் எளிதாக்கப் படுகிறது. பெங்களூருவில் உங்கள் கைபேசி (cellphone) போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பாரதி ஏர்டெல் நிறுவனத்தினர், செல்லுலர் கோபுரங்களுடன் (cell tower) எத்தனை தொலைபேசிகள் இணைப்பு பெறுகின்றன என்ற தகவலை வைத்து போக்குவரத்தின் சராசரி வேகத்தைக் கணித்து அந்தத் தகவலையும் அவ்வப்போது மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகிறார்களாம். இந்தத் தகவலை வைத்து எந்தச் சந்திப்பில் எந்த நேரத்தில் எவ்வளவு வாகனங்கள் வரக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்க இயலும். அட!
சைகை விளக்கை மதிக்காமல் செல்லும் வாகனங்களை காமிரா மூலம் படம் பிடித்து, அந்த வாகனங்களின் பதிவு எண்களை உபயோகித்து கணினி உதவியுடன் வாகன உரிமையாளர்களுக்கு 'அன்புக் கடிதம்' அனுப்பும் தொழில்நுட்பம் கூட பெங்களூருவில் வந்து விட்டதாம்! இன்னம் கொஞ்ச நாட்களில் அபராதத்தையும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானே பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்து கொடுத்து விடுவார்கள்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search