Tamil
QoTD
நாணய மதிப்பு
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
உலக நாடுகள் தத்தம் நாணய மதிப்பை எந்த அளவில் குறியிட்டு நிறுத்துவது என்ற போட்டா போட்டியில் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எலிப் பந்தயத்தைப் பற்றி பிறகு சிந்திப்போம். ஒரு நாட்டின் நாணயம் எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.
அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், எரிசக்தி (சமைப்பதற்குச் சூடும், இருட்டுக்கு விளக்கும்) ஆகியவற்றைப் பெற ஒரு நாட்டின் குடிமக்கள் உழைப்பையும், நேரத்தையும், நில வளத்தையும், பொருளையும் செலவிட வேண்டியிருக்கிறது. தன்னிடம் கிடைக்காத பொருளை (இந்தியாவிற்கு எண்ணை வளம்) அடுத்தவரிடம் கை நீட்டி வாங்க அவர் கேட்கும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
தனது தேவைகளை நாளடைவில் குறைவான உழைப்பையும், பொருளையும், நில பல வளங்களையும் உபயோகித்துத் தயாரித்துக் கொண்டு, அடுத்தவரிடம் கை நீட்ட வேண்டிய தேவைகளைக் குறைத்துக் கொள்ளும் நாட்டின் நாணய மதிப்பு நாளடைவில் உயர்கிறது. அப்படிச் செய்யும் குடிமக்களுக்கு ஆக்க பூர்வமாக சிந்திக்கும் திறன் இருக்கிறது. செக்கு மாடு போல சொல்லிக் கொடுத்த வேலையை திரும்பத் திரும்ப இயந்திரம் போல் செய்பவன் இருக்கும் நாட்டில் உற்பத்தித் திறன் மேம்படாது.
நாடுகளுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் நாணய மதிப்பு உண்டு. தனியார் நிறுவனங்கள் தம் நாணய மதிப்பை தான் செய்யும் வேலையில் ஈட்டும் லாபத்தைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள். அதுவே பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பை நிர்ணயிக்கிறது.
நாணயம் என்ற சொல் கொடுக்கும் மற்றொரு பொருள் நேர்மை. லஞ்சமும், ஊழலும், பதுக்கலும் மிக்க நாட்டில் அரசால் பணப் புழக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியாது. பணம் என்பது மதிப்பில்லாத சாதாரணத் தாளால் வெளிப்படுத்தப் படும் ஒரு முக்கிய வாக்குறுதி. நாட்டில் புழங்கும் பணத்தின் மொத்த அளவு அந்த நாட்டு மக்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை ஒத்தே இருக்க வேண்டும். ஆக நாட்டு மக்களின் நேர்மையும் நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது.
நிலவளம், உழைப்பு, மூலப் பொருட்கள், இவற்றை அரிதாகப் பயன்படுத்திப் நிறைய உற்பத்தி செய்யும் யோசனை சக்தி, மற்றும் நேர்மை என்ற இவையனைத்தும் நாட்டின் நாணய மதிப்பை நிர்ணயிக்கின்றன.
என்ன? திங்கட்கிழமை வேலையைப் பாதி நேரத்தில் முடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் - வள்ளுவர்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search