Tamil
QoTD
நான் மகான் அல்ல - திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
ஆகஸ்ட் 23, 2010 - இரண்டுங்கெட்டான் வயசு போதைப் பழக்கக் கும்பல் கார்த்தியின் அப்பாவுடைய வாடகை வண்டியில் ஒரு பெண்ணை, அவள் காதலனுடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூட்டி வருகிறார்கள். கார்த்தியின் அப்பா ஆட்சேபிக்கும் போது, அந்தப் பெண்ணுடைய சம்மதத்துடன் இது நடப்பதாகச் சொல்கிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணைக் கெடுத்து, அவளையும் அவள் காதலனையும் வெட்டித் துண்டு போட்டு குப்பை மேட்டில் எறிந்து விடுகிறார்கள். காவல் துறை கொலையான பெண்ணின் முகத்தை தொலைக்காட்சியில் காட்டப் போக கார்த்தியின் அப்பா அடையாளம் கண்டு கொண்டு காவல் துறையிடம் துப்புக் கொடுக்கிறார். அவர் இருந்தால் ஆபத்து என்று அவரை ரவுடிக் கும்பல் தீர்த்து விடுகிறார்கள்.
இது நடக்கும் வரை கார்த்தி வேலை இல்லாத இளைஞனாக நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார். அவர் செய்யும் குறும்புகள் ரசிக்கும் படி இருக்கின்றன. நகைச்சுவைக்கென்று தனியாக ட்ராக் தேவையில்லாமல் முதல் பாதியில் கார்த்தி செய்யும் சேட்டைகளில் படம் சுவாரசியமாக நகர்கிறது. இயல்பாக நடித்திருக்கிறார். காதலியின் அப்பாவிடம் தடலடியாக நேரடியாகப் பெண் கேட்கும் இடம், தோழியின் திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் போது நண்பனைப் பக்கத்தில் அழைத்து நிறுத்திக் கொண்டு, அவன் பெருமைப் படும் போது "நீ பக்கத்தில் நின்றால்தான் நான் கொஞ்சம் எடுப்பாய்த் தெரிவேன்" என்று கவிழ்க்கும் இடம், என்று கலகலப்பிற்குப் பஞ்சமில்லை.
இரண்டாம் பாதியில் வன்முறை அதிகம். கொலை, துரத்துதல், பழி வாங்கும் படலம் எல்லாம் இந்தப் பாதியில் மிகத் தூக்கலாக வருகிறது. சுசீந்திரன் இந்தப் படத்தை நன்றாக இயக்கியிருக்கிறார். காட்சி அமைப்புகளும் கதையின் சீரான ஓட்டமும் நல்ல விறுவிறுப்பைக் கொடுக்கின்றன. கதாநாயகியையும், காதலையும் ஊறுகாய் போல உபயோகித்திருக்கிறார். வித்தியாசம் வரவேற்கத் தக்கது. பாடல்கள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை.
முதல் பாதியை அனைவரும் ரசிக்கலாம். இரண்டாம் பாதியை ரத்தம் பார்க்கப் பயப்படாதவர்கள் விறுவிறுப்பு வேண்டுபவர்கள் ரசிக்கலாம். ஆனால் 'கார்த்தி' காகவே இந்தப் படம் ஓடும் என்று நினைக்கிறேன்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search