Tamil
QoTD
மதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
ஜூலை 25, 2010 - பணி நிமித்தம் வெள்ளி இரவு பயணப் பட்டிருக்க வேண்டும். திடீரென ரத்தாகி விட்டது. கையில் லட்டு போல் கிடைத்த முழு வாரக் கடைசி. இரண்டு திரைப்படம் பார்ப்பது என்று இரண்டாவதாக மதராசப்பட்டினம் தேர்வாயிற்று.
வித்தியாசமான கதை. 1947 ஆம் வருடத்துச் சென்னையில் ஒரு தமிழனுக்கும் ஆங்கிலேயப் பெண்ணிற்கும் இடையே மலரும் காதலைக் கருவாகக் கொண்ட படம். திரைக் கதை தற்கால லண்டனில் ஆரம்பித்து தற்காலச் சென்னையில் முடிகிறது. ஆங்கிலப் படத்திற்கு இணையான காட்சி அமைப்புகளுடன் தொடங்குகிறது. நடுவில் நம்மை மதராசப் பட்டினம் கூட்டிப் போகிறார்கள்.
கதாநாயகி ஏமி ஜாக்ஸன். ஹாலிவுட் இறக்குமதி. பொம்மை மாதிரி மிகவும் அழகாக இருக்கிறார். கதையை உணர்ந்து நடித்திருக்கிறார். வழக்கமான தமிழ்ப் படத்தில் வரும் 'தீப்பிடிக்கத் தீப்பிடிக்க' உரசிக் கொள்ளும் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை. சராசரித் தமிழனின் ரசனை மாறி வருகிறது.
சிரமப் பட்டு 1947ம் வருடத்து மதராஸைக் கண்ணுக்கு முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். இன்றும் மஹாபலிபுரம் பக்கம் போனால் பக்கிங்ஹாம் கால்வாயை அதன் பழைய செருக்கில் பார்க்கலாம். வெளிப்புறக் காட்சிகளை அங்கே போய் எடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. சென்னை சென்ட்ரல், மௌண்ட் ரோடு காட்சிகளை 'செட்'டில் அமைத்திருக்கிறார்கள். பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். பாராட்ட வேண்டும். ஆனால் அவர்களே காட்டும் 1947 வருட மதராஸ் சென்ட்ரல் புகைப்படமும் செட்டும் பொருந்தவில்லை. ஏமியின் அறையில் இருந்து விரியும் சென்னை மாகாணக் காட்சி க்ராஃபிக் கலைஞரின் வேலை என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
காமிராக் கோணங்கள் அருமை. ஒளிப் பதிவு அவ்வளவு இதமாக இல்லை. பாடல்கள் பிடித்திருந்தன. இடைவேளையின் போதே படம் முடிந்து விட்ட மாதிரி உணர்கிறோம். அதற்கும் பிறகு க்ளைமாக்ஸ், ஆன்டி க்ளைமாக்ஸ் என்று கொஞ்சம் அறுத்து விட்டார்கள். விட்டால் போதும் என்ற உணர்வு தோன்றி விடுகிறது.
நல்ல முயற்சி. இன்னமும் கதையின் நடையை வேகப் படுத்தித் தேவையில்லாத ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்திருந்தால் இந்தப் படம் ஒரு "மாஸ்டர்பீஸ்" ரேஞ்சிற்குப் போயிருக்கும்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search