Tamil
QoTD
மந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
நவம்பர் 20, 2010 - படத்தை கரு பழனியப்பன் இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம்தான் படம் எழுந்து உட்கார வைக்கிறது. அது வரை திரையரங்கில் பலருக்கு இருக்கை கொள்ளவில்லை. எழுந்து போய்விட்டார்கள். படம் பெரிய முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. பிறகு கதாநாயகனின் நடத்தை பற்றி ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆங்கிலப் படத்துக்கு இணையான படுக்கையறைக் காட்சியில் அவர் அறிமுகமாகிறார். கதாநாயகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த அதே பெண். அங்கே மதுரை மணம் மாறாமல் வந்தவர் இங்கே அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் வருகிறார். எனக்கு அந்த மதுரை மணம்தான் இன்னமும் பிடித்திருக்கிறது. படம் முழுக்கக் கதாநாயகனுக்கு மேக்கப் சுத்தமாக இல்லை. எதிர்மாறாக கதாநாயகிக்கு காட்சிக்குக் காட்சி பொங்கலுக்கு வெள்ளையடித்த மாதிரி செய்திருக்கிறார்கள். கதாநாயகி முயற்சி செய்து நடித்திருக்கிறார். பாராட்டலாம்.
சந்தானம் ட்ராமாவிற்கு வசனம் பேசுவது போல் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எதிர் காலத்தில் இன்னமும் நன்றாக வருவார். பல இடங்களில் கலகலக்கவும் வைக்கிறார். ஆனால் கதையின் நடையுடன் ஒட்டாத அல்லது அதற்குத் தேவையில்லாத பல ஒட்டுகள் வரும் போது "கதையைச் சொல்லுங்கப்பா" என்ற யோசனை வருகிறது. முதல் பாதிதான் இப்படி. இரண்டாம் பாதி போவதே தெரியவில்லை.
எடுத்துக் கொண்ட கதை சிக்கலானது. அதைச் சொல்லிவிட்டால் படத்தில் முதல் பாதியின் ஆமைவேக நடைக்குப் பிறகு வரும் திருப்பத்தின் தாக்கம் மற்றும் விறுவிறுப்பு போய்விடும். க்ளைமாக்ஸ் கூட மின்னல் வேகத்தில் வந்து போனாலும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் செய்திருக்கிறார்கள். அதற்கும் பிறகு ஒரு டூயட் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் திரையரங்கம் காலியாகி விட்டது. தேவையில்லாத ஒட்டுகளை நீக்கி விட்டால் படம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முடிந்து போகும். ஆனால் ஒரு அருமையான படமாக வந்திருக்கும். இயக்குனருக்குத் திறமை இருக்கிறது.
சென்னையை வித்தியாசமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை.
வேறு நல்ல படத்திற்கு இடம் கிடைக்காவிட்டால் பார்க்கலாம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search