Tamil
QoTD
மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா?
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
இது பட்டிமன்றத் தலைப்பு. சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சாலமன் பாப்பையா நடுவர். நிறையப் பேசினார்கள். கைதட்டல் மற்றும் சிரிப்பொலி ஏற்படுத்தப் பேசினார்கள். ஆழம் போதாமல் கருத்துகளை முன் வைத்தார்கள். கடைசியில் நடுவர் திருமணத்திற்குப் பின்பே என்று முடித்தார். அவர் முடிவு சரியாக இருந்தாலும் அவர் கொடுத்த விளக்கம் மேலோட்டமாகவே இருந்தது. ஒரு வேளை நிகழ்ச்சியின் நகைச்சுவை ஓட்டத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக அவர் அப்படி மேலோட்டமாக விளக்கி இருக்கலாம்.
இன்னொரு கருத்து. நிகழ்ச்சி முழுவதும் ஆண்மகனின் மகிழ்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மனிதன் என்ற சொல் இருபாலாரையும் குறிப்பதில்லையா? அப்படி இல்லையென்றால் இருபாலாரையும் குறிக்கும் சொல் தமிழில் இல்லையா?
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது மற்றவரால் உருவாக்கப் படுவதில்லை. ஒருவர் தன் மனநிலையை எந்தத் தருணத்திலும் தானே தேர்வு செய்து வாழ்க்கையை நுகர்கிறார். சராசரி மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இள வயதில் மனநிலையைத் தேர்வு செய்யும் பக்குவம் சாதாரணமாக யாருக்கும் அமைவதில்லை. மேலும் அதை மகிழ்ச்சியாக அமைத்துக் கொடுக்கப் பெற்றோர் முனைந்து பாடுபடுகிறார்கள்.
ஆணும் பெண்ணும் உலகில் வகிக்கும் முதல் பொறுப்பு உயிரின விருத்தி செய்யும் பொறுப்பு. உயிரின விருத்தி செய்யத் திருமணம் அத்தியாவசியமில்லை. ஆனால் திருமணம் என்பது மனிதன் ஆண்டாண்டு காலமாகப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அமைத்துக் கொடுத்த ஒரு வகை முறை அல்லது நிறுவனம். அதை மதிக்க வேண்டியது அவசியம்.
திருமணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் பல்வேறு பிரச்சினைகளைத் சேர்ந்து நின்று சந்திக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவுகளை எடுக்கிறார்கள். அதன் விளைவுகளைச் சந்திக்கிறார்கள். பல கட்டங்களில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அங்கே அப்படி சொந்தக் காலில் நிற்பவர்கள் தம் மனதில் ஒவ்வொரு கட்டத்திலும் குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி. அப்படிப் பட்ட மகிழ்ச்சியை நிலை நிறுத்தப் பக்குவம் தேவை. மன உறுதி தேவை. விட்டுக் கொடுத்தலை அனுபவிக்கும் மனப்பான்மை தேவை.
திருமணம் செய்து கொள்ளாதவர்கள், அந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகியிருந்து வாழ்க்கையை நுகர்கிறார்கள். அவர்களுக்கு விட்டுக் கொடுத்தலின் தேவைகள் குறைவு. ஆகவே அவர்கள் பெறும் மகிழ்ச்சியின் ஆழம் குறைவு. ஆகவே அவர்கள் இந்த விவாதத்தின் வரை எல்லைகளில் இருந்து வெளியே நிறுத்தப் படுகிறார்கள்.
ஆக வாழ்க்கையின் அர்த்ததை முழுவதும் உணர்ந்து அதில் ஈடுபட்டு, தேவையான போது விட்டுக் கொடுத்து வாழ்ந்து அதில் நிறைவைக் காண்பவரே உண்மையில் மகிழ்ச்சியைச் சொந்தமாக அனுபவிக்கிறார். மற்றதெல்லாம் ஆழமில்லாத மகிழ்ச்சி. ஆழமான மகிழ்சிக்குத் தேவையான மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்பவரே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற கருத்தை ஜனரஞ்சகமாக நடுவர் சொன்னார் என்று எனக்குப் பட்டது.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search