Tamil
QoTD
கடைசி வீடு
Udayakumar Nalinasekaren
Oct 05, 2014
ஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.
வியாபாரம் கொழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.
கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.
வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. காமா சோமாவென்று இருந்தது.
கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search