Tamil
QoTD
இனிது இனிது - திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
முழுக்க முழுக்க வேலூர் தொழில் நுட்பக் கல்விக் கூடத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புதிய இயக்குனர் கே வி குஹன் படம் பார்ப்பவர்கள் அவரவர் மனக் கண்ணில் தன் கல்லூரி வாழ்க்கையின் சொந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வளவு அருமையான கட்டமைப்புடன் ஒரு பொறியியல் கல்லூரி தமிழ் நாட்டில் இருப்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரியும்.
படத்தில் நடித்திருக்கும் புதுமுக இளசுகள் கலக்கி விட்டார்கள். அருமையான நடிப்பு. சிக்கலான இளவயசு மனோதத்துவங்கள் இந்தப் படத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன. கல்லூரி வாழ்க்கையில் அனுபவிக்கும் சுதந்திரத்தில் ஒரு அவனோ அவளோ எப்படி உருப் பெறுகிறார்கள். அதில் தாழ்வு மனப்பான்மை எப்படி தனி நபர் செயலாக்கத்தைப் பாதிக்கிறது, நட்பு என்ற மனித குணம் எவ்வளவு தூரம் மன்னிக்கக் கூடியது, எத்தனை பெருந்தன்மை காட்டக் கூடியது, எவ்வளவு உதவிக் கரம் நீட்டக் கூடியது, நட்புக்கும் காதல் உணர்ச்சிக்கும் இடையே ஏற்படும் குழப்பம் என்ற சிக்கலான விஷயங்கள் இந்த இளசுகளால் இலகுவாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாராட்டுக்கள்!
கதாபாத்திரங்கள் தேர்வு அருமை. காட்சி அமைப்புகளும் வசனங்களும் இளமை துள்ளும் விதத்தில் அமைக்கப் பட்டிருகின்றன. ஒளிப் பதிவு ஏதோ வெளிநாட்டில் இருப்பதைப் போன்ற உணர்ச்சியையே ஏற்படுத்துகிறது. இளம் உள்ளங்களுக்குள் அனுபவ முதிர்ச்சியைப் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கிறது.
சீனியர், ஜூனியர் கிரிக்கெட் போட்டி நல்ல விறுவிறுப்பு. கல்லூரியை விட்டுப் போக வேண்டிய நாளில் காட்சிகள் என்னை எனது கல்லூரி நண்பர்களையும் நாங்கள் அந்த நாளில் உணர்ச்சி வசப் பட்டதையும் கண் முன்னே பார்க்கச் செய்தன.
'இனிது இனிது' பாடல் அருமை. மற்ற பாடல்கள் வரும் இடங்களில் ஒளிப் பதிவு அருமையாக இருந்த போதிலும் கதை வேகம் குறைந்து படம் சவ்வாக இழுக்க ஆரம்பிக்கிறது. பாடல் முடிந்ததும் திரும்பவும் பழைய உற்சாகம்.
மொத்ததில் படம் மிகவும் பிடித்திருந்தது. படத்தின் முடிவில் முதல் முறையாக இந்தியாவில் ரசிகர்கள் கை தட்டிப் பாராட்டியதைப் பார்த்தேன்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search