Tamil
QoTD
எந்திரன் திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
அக்டோபர் 3, 2010 - மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், காதலியின் ஏக்கத்தை மதியார் என்ற ரேஞ்சில் ரஜினி தன் போலவே உருவம் கொண்ட ஒழுக்கமான ரோபோ ஒன்றை வடிவமைக்கிறார். அந்த ரோபோ சொல்வதைத் திருத்தமாகச் செய்கிறது. மனிதனுக்கு உள்ளதைப் போல கோபம், துக்கம், பச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் அதற்கு இல்லை. ரஜினியின் ஆசானுக்கு இந்த அளவிற்குக் கூடச் செய்ய இயலவில்லை. அவருக்கு ரஜினியின் மேல் பொறாமை. ஆகவே ரஜினியின் படைப்பை அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார். ரஜினி ரோபோவிற்கு உணர்ச்சி சொல்லிக் கொடுக்க அது ரஜினியின் காதலிக்கே (ஐஸ்வர்யா) 'லைன்' போடுகிறது. 24 மணி நேர 'பாட்டரி' சக்தியில் ஒடும் ரோபோவிற்கு வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் ரோபோ தப்பு செய்ய அதைக் கோபத்தில் ரஜினி உடைத்துக் குப்பையில் போட்டு விடுகிறார்.
குப்பை மேட்டில் தன்னைத் தானே முடிந்த வரை சரி செய்து கொண்டு ஆசானின் உதவியுடன் தப்பி விடுகிறது ரோபோ. ஆசான் தீவிரவாதக் கும்பலுக்கு உதவ பெட்டி நிறைய டாலர் வாங்கிக் கொண்டு ரோபோவிற்கு தீசல் கற்றுக் கொடுக்கிறார். அது நேராகப் போய் ஐஸ்வர்யாவை கடத்தி வந்து விடுகிறது. ஆசானைப் போட்டுத் தள்ளி விடுகிறது. ரஜினி எப்படி ரோபோவை அடக்கி வழிக்குக் கொண்டு வந்து காதலியை மீட்கிறார் என்பதே இதைப் படிப்பவர் திரையில் காண வேண்டிய மிச்ச சொச்சக் கதை.
முன் பாதிக் கதையை சுஜாதாவின் படைப்பில் ஏற்கெனவே படித்து விட்டோம். ரோபோ வில்லத்தனம் செய்யும் போது அதை வைரஸ் ஏற்றி அழிப்பது 'Independence Day' ஆங்கிலப் படத்தில் வந்து விட்டது. க்ளைமாக்ஸில் தமிழ் சினிமாத்தனம் (நாகப் பாம்பு ஃபைட்) அழுத்தமான தமிழ் விட்டலாச்சார்யா ஒரிஜினல்.
படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம். அங்கங்கே தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல ஐஸ்வர்யா. ரஜினி இந்த வயதிலும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். 'பஞ்ச்' வசனம். 'மேனரிஸம்' எதுவும் இல்லாமல் அருமையான நடிப்பு. வழக்கப் படி அவரே நகைச்சுவை 'ட்ராக்'கும் செய்திருக்கிறார். 'ட்ராஃபிக் போலீஸ்' மால் வெட்டச் சொல்லிக் கேட்க வெட்டுவதன் அர்த்தம் புரியாமல் கத்தியை எடுத்து ரோபோ 'கான்ஸ்டபிள்' கையை வெட்டும் ஜோக் நன்றாக இருந்தது. வில்லன் ரோபோவின் நடிப்பு ரஜினியின் உச்சம். க்ராஃபிக்ஸ் சிறப்பாக வர பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். உழைப்பு வீண் போகவில்லை. ஆனால் கொசுவுடன் ரோபோ பேசுவது போன்ற சில அபத்தங்களைத் தவிர்த்திருக்கலாம். 'சயன்ஸ் ஃபிக்ஷன்' படம் என்று எதிர் பார்ப்பைக் கிளப்பி விட்டு சில இடங்களில் யோசிக்காமல் படம் எடுத்திருக்கிறார்கள். தீ விபத்துக்குள் 700 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் உலோகத்தால் ஆன ரோபோ உள்ளே போய் மனிதரைத் தொட்டால் தோல் வெந்து போகாதா? ரோபோவிற்கு மட்டும்தான் வெந்து போகுமா?
படம் பார்க்க வந்திருந்தவர்களில் பலர் ரஜினியின் சம வயதுக் காரர்கள். அடக்கமாகப் படம் பார்த்தார்கள். இரண்டாம் நாள் படத்தில் விசில், கூச்சல் எதுவும் இல்லை. அங்கங்கே முதிர்ச்சியான கைதட்டல் கேட்டது. கிளிமாஞ்சாரோ பாடல் படப் பிடிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருந்தது.
மொத்தத்தில் படம் நன்றாக் இருந்தது. கூட வந்த சின்னப் பையன் திரும்ப ஒரு முறை பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search