Tamil
QoTD
என் அடிமைகளுக்கு நீ அடிமை
Udayakumar Nalinasekaren
Apr 06, 2011
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.
அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.
முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.
முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து "கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர் "மன்னா.. நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!" என்றார்.
அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. "நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக் முடியும்?" என்று முனிவரிடம் கேட்டான். அவர் "அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்" என்றார்.
மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search