Tamil
QoTD
டிஜிட்டல் என்றால் என்ன?
Udayakumar Nalinasekaren
Apr 14, 2017
டிஜிட்டல் என்பதற்கு தமிழ் சொல் எண்ணியல்.
தமிழ் மொழியின் புராதனத்தை நாம் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறோம். ஆயினும் எண்ணியல் என்ற வார்த்தை பிரயோகம் படிக்கும் போது மூளையை சடுதியில் சூடாக்கி விடுவதால் இனிமேல் டிஜிட்டல் மட்டுமே.
இப்போதெல்லாம் நாங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறோம் என்று சொல்வது நாகரீகம். சொல்லாதவர்களை கற்கால மனிதர்கள் போல் பார்க்கிறார்கள்.
என்னை போன்ற பாமரனுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் டிஜிட்டலுக்கு சில உதாரணங்களை சுட்டிக் காட்டினால் ஒரு மாதிரி லேசாக புரிந்த மாதிரி தோன்றும்.
முன்னொரு காலத்தில் இளையராஜா பாட்டு நினைத்த நேரத்தில் கேட்க வேண்டுமென்றால் கடைக்குப் போய் காந்த நாடாவில் (ஒலி நாடாவில்) பதிவு செய்த பாடல்களை வாங்கி வந்து அதற்கான ஒலிப்பெட்டியில் போட்டு கேட்டோம்.
இப்போதெல்லாம் பாடல்களின் ஒலி வடிவத்தை ஒன்று அல்லது பூச்சியம் என்ற இரண்டே எண்களை உபயோகித்து குறியீடு செய்து விடுகிறார்கள். பாடுபவரின் மூச்சுக் காற்றைக் கூட சில சமயம் துல்லியமாக கேட்க இயலுகிறது. இப்படி நிலையான (standard) எண் குறியீடாக ஒலியை மாற்றும் போது அதை கணினியில் சேமிப்பதும், கணினிகளுக்கு இடையே பறிமாறிக் கொள்வதும் இலகுவாகிறது. பறிமாற்றங்களின் போது ஒலியின் துல்லியம் குறைவதே இல்லை. தயாரிக்கும் செலவும் பயன்பாட்டுச் செலவும் குறைகிறது.
கைபேசியில் ஹெட்ஃபோன் பொருத்தி காதில் மாட்டிக் கொண்டு உலகத்தையே தொலைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் இளையராஜா கேட்கலாம். இன்று வரை உங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் வரும் வாய்ப்பில்லை.
செத்தால் மட்டும் இன்னமும் பிழைக்கத் தெரியாத கணினி விஞ்ஞானிகள் பணம், புத்தகங்கள் போன்றவற்றையும் டிஜிட்டல் ஆக்கி விட்டார்கள். ஆதார் மூலம் உங்கள் அடையாளமும் இப்போது டிஜிட்டல். உங்கள் கைரேகை மற்றும் கருவிழிப் படலம் இப்போது நிலையான எண்குறியீட்டில் பதிவு செய்யப் படுகிறது. பலன் - சமையல் எரிவாயு மானியம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு யார் கண்ணிலும் படாமல் வந்து சேருகிறது.
விடாமுயற்சியாக வேறு எதையெல்லாம் டிஜிட்டல் ஆக்கலாம் என்று தேடித்தேடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உலகமே கைபேசிக்குள் வந்து விட்டதாக ஏற்கெனவே நாம் பலரும் உணர்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் டாக்ஸி கூப்பிடுவதை டிஜிட்டலாக்கி அசத்தினார்கள். சடுதியில் பற்றிக் கொண்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பணம், புத்தகம் எல்லாம் தொடக்கூடிய பொருட்கள். டாக்சி கூப்பிடுவது என்பது ஒரு நடைமுறை. தொட்டு விடக் கூடிய ஒரு பொருள் அல்ல.
இந்த டிஜிட்டல் விந்தை ஒரு பதிவில் அடங்கி விடப் போவதில்லை.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search