Tamil
QoTD
சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
டிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட வார்ப்பு. முன் பின் தெரியாத ஒரு பையனும் பெண்ணும் காடு மலையெல்லாம் கடந்து வெகுதூரம் பயணம் போவார்கள். ஏரி, குளம், மலைப் பாதை எங்கும் சுற்றித் திரிந்து ஆடிப் பாடுவார்கள். அவர்களுக்குள் காதல் முளைக்கும். ஆனால் அது அவர்களுக்கே கடைசி காட்சியில்தான் புரியும். கண்டேன் காதலை, பையா, உத்தம புத்திரன் (ஏன் ஒரு வகையில் மைனா கூட ஏறக்குறைய இது மாதிரித்தான்) வரிசையில் இப்போது சிக்கு புக்கு. உஸ்.. அப்பப்பபா.. முடியல......!!
'அனிமேஷனில்' ஆரம்பித்து காரைக்குடிக்குத் தாவி சட்டென்று லண்டன் போய் ஆரம்பிக்கிறது கதை. நாயகனும் நாயகியும் லண்டன்வாசிகள். இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக பெங்களூரு வழியாக, நாயகி மதுரை சிம்மக்கல்லுக்கும் நாயகன் காரைக்குடிக்கும் முறையே போக வேண்டும். பெங்களூருவில் மதுரை விமானம் ரத்தாகிப் போக, ரயிலில் கறுப்பில் பயணச்சீட்டு எடுத்து இருவரும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி பயணப் படுகிறார்கள். வழியில் பொய் அம்பலமாகி விட ரயிலில் இருந்து இறக்கி விடப் பட்டு, காடு மற்றும் மலைப்பாதைப் பயணம். நாயகனிடம் ஒரு 'டையரி' இருக்கிறது. அது நாயகனின் அப்பாவைப் பற்றிய கதை. அந்த ஃப்ளாஷ்பாக் கதையையும், இளசுகளின் பயணக் கதையையும் மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். ஆனால் பின்னல்கள்/ இடைச்செருகல்கள் இருந்தும் குழப்பாமல் கதை சொல்லியிருக்கிறார்கள். பாராட்ட வேண்டும். அந்த நாட்குறிப்பில் இருக்கும் கதைதான் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே என்ன பந்தம் இருக்கிறது என்ற முடிச்சைக் கடைசியில் அவிழ்க்கும் கதை.
கதையிலும் ஃப்ளாஷ்பாக்கிலும் ஆர்யாதான் நாயகன். ஃப்ளாஷ்பாக் கதாநாயகி புதுமுகம் ப்ரீத்திகாவாம். எவ்வளவு ஒப்பனை செய்தாலும் அவருக்கு ஒப்பனை பொருந்தவில்லை. கதையின் நாயகி ஷ்ரேயா. கரீனா மாதிரித் துள்ளலுடன் நடிக்கிறேன் என்று மிகவும் முயற்சித்து அங்கங்கே பல இடங்களில் வெறுப்பேற்றுகிறார். ஆனால் இறுதிக் காட்சியில் பின்னி விட்டார்.
அப்பாவாக நடிக்கும் ஆர்யா விரட்டி விரட்டிக் காதலித்து விட்டு, காதலியும் உருகி உருகிக் காதலிப்பதை அனுபவித்து விட்டு, அதற்கும் பிறகும் நண்பனுக்காகப் பரிதாபப் பட்டு விட்டுக் கொடுத்து விட்டாராம். அப்படிப் பட்ட கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் என் மனதுக்கு ஒப்புதலாக இல்லை. இயக்குனரும் அவரும் சேர்ந்து கோட்டை விட்டு விட்டார்கள்.
சந்தானம், பாண்டு என்று ஒரு கோஷ்டி இடையில் வந்து அப்படியே போய்விடுகிறார்கள். பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை. பல இடங்களில் காமிராக் கோணங்களும், ஒளிப்பதிவும் இதமாக இருந்தன.
இந்த 'ஸ்டீரியோடைப்புக்கு' பதிலாக 'ஜப் வி மெட்' படத்தையே இன்னமும் ஒரு முறை பார்த்திருக்கலாம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search