Tamil
QoTD
ஆபத்து! காப்பாற்று !!
Udayakumar Nalinasekaren
Aug 31, 2014
ஆங்கிலேய பண்ணையில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்கு சொந்தக்காரனும் அவன் மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்தனர்.
எலி செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஒருவருக்கும் எலி அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நாள் பண்ணைக்காரனும் அவன் மனைவியும் சந்தைக்கு போய் வரும் போது எதையோ காகிதத்தில் சுற்றி வாங்கி வந்ததை சுவற்றுப் பொந்தில் இருந்து எலி பார்த்தது. அந்த சாமான் ஒரு எலிப்பொறி என்று கண்டதும் திடுக்கிட்டுப் போனது.
உடனே கோழியிடம் போய் "என்னைக் கொல்ல எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்" என்று கேட்டது. கோழியோ "இது என் பிரச்சினையே இல்லை. நானா பொறியில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்? உன் பிரச்சினையை உன்னிடமே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு தரையை கொத்த ஆரம்பித்துவிட்டது.
பிறகு எலி பன்றியிடம் போய் முறையிட்டது. பன்றி அதை காதிலேயே வாங்கவில்லை. மாட்டிடம் போனால் அதுவும் "போ போ.எனக்கு வேறு வேலை பார்க்க வேண்டும்”என்று துரத்திவிட்டது.
எலியும் வேறு வழி தெரியாமல் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை தொடர்ந்தது.
ஒரு நாள் நடு இரவில் எலிப்பொறி பட்டென்று மூடும் சத்தம் கேட்டது. பண்ணைக்காரன் மனைவி இருட்டில் தடவிக் கொண்டே என்னவென்று பார்க்கப் போனாள். பொறியில் ஒரு பாம்பின் வால் மாட்டிக் கிடந்ததை அறியாமல் பொறியில் கை வைக்கப் போய், அந்தப் பாம்பு அவளை கடித்துவிட்டது. நச்சின் வீரியம் தாங்காமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.
வைத்தியன் வந்து பார்த்தான். அவளுக்கு கோழி சூப் வைத்துக் கொடுத்தால் ஒரு வேளை அவளுக்கு நச்சை எதிர்க்கும் சக்தி கூடலாம் என்று யோசனை சொன்னான். பண்ணைக்காரன் அன்றிரவே கோழியை அடித்து சூப்வைத்து மனைவிக்குக் கொடுத்தான்.
நாளுக்கு நாள் மனைவியின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது. உற்றார் உறவினர் எல்லாம் நலம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க ஏதும் இல்லை என்று ஒரு நாள் பன்றியை கசாப்பு போட்டுவிட்டான் அந்த பண்ணைக்காரன்.
நோய் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நாள் மனைவி இறந்தே போனாள். அவளுடைய ஈமச்சடங்கிற்காக உற்றம் சுற்றம் எல்லாம் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போட காசும் தானியமும் கையில் இல்லை. வேறு வழியில்லாமல் பண்ணைக்காரன் மாட்டையும் அடிக்க வேண்டியதாயிற்று.
நீதி: கூட இருப்பவர்களுக்கு ஆபத்து என்றால் அதை அசட்டையாக புறம் தள்ளாதே. உனக்கான ஆபத்தும் அதில் ஒளிந்திருக்கக் கூடும்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search